search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவநாதசுவாமி கோவில்"

    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் தேசிகருக்கு தனி சன்னதி உள்ளது. தேசிகருக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தையொட்டி 12 நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 750-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில் தேசிகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் தேவநாதசுவாமிக்கும், தேசிகருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

    இதனை தொடர்ந்து தேசிகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலில் இருந்து தேசிகர், அலங்கரித்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேருக்கு கொண்டு வரப்பட்டார். தேரில் அமரவைக்கப்பட்ட தேசிகருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் டிராக்டர்களில் தேரின் வடம் கட்டி, இழுக்கப்பட்டது. முக்கிய வீதிகளில் சென்ற தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது. வழிநெடுகிலும் தேசிகரை பக்தர்கள் வழிபட்டனர்.

    பிரம்மோற்சவத்தின் 10-ம் நாள் விழாவான இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு தேசிகர், ரத்தினங்கி சேவை அலங்காரத்தில் அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் சன்னதியில் காட்சி அளிக்கிறார். பின்னர் மதியம் 2 மணிக்கு தேவநாதசுவாமி, ராமர், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், தாயார் சன்னதிகளுக்கு சென்று தேசிகர் வழிபடுகிறார். பின்னர் இரவில் கண்ணாடி பல்லக்கில் தேசிகர் வீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமார், பூஜைக்கான ஏற்பாடுகளை ஜெயபிரகாஷ் பட்டாச்சாரியார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    ×